×

இயற்கையோடு வாழ்ந்தால் ஆரோக்கியம் கியாரண்டி!

நன்றி குங்குமம் தோழி

‘‘தாத்தா… அவரின் அப்பா மற்றும் அவரின் அப்பா என்று பரம்பரையாகத்தான் நாங்க வைத்தியம் பார்த்து வருகிறோம். என் பசங்க ஏழாம் தலைமுறையாக இந்த சிகிச்சை முறையில் ஈடுபட்டு வராங்க’’ என்கிறார் சரவணாம்பிகை. இவர் சென்னை தாம்பரம் அருகே ‘ஸ்ரீபோகர் ஆரோக்கியாலயா’ என்ற பெயரில் ஆயுர்வேதம், நேச்சுரோபதி, சித்தா, ஹோமியோபதி என அனைத்து பாரம்பரிய சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்து சிகிச்சை மையம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

‘‘நான் டாக்டர் பட்டம் எல்லாம் வாங்கல. ஆனால் என் பசங்க, மருமகள்கள் எல்லாரும் அந்தந்த துறையில் முறையாக பட்டம் பெற்று இப்போது டாக்டரா எங்க மருத்துவமனையில் பணியாற்றி வராங்க. தாத்தா மற்றும் அவரின் நண்பர்கள்தான் எனக்கு குருமார்களாக இருந்தார்கள். சொல்லப் போனால் நான் குருகுல முறையில்தான் சித்த மருத்துவம் பயின்றேன். சின்ன வயசில் இருந்தே தாத்தா வீட்டில் வைத்தியம் பார்ப்பதைப் பார்த்துதான் வளர்ந்தேன் அதனால் எனக்கு இந்த துறை மேல் தனிப்பட்ட ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது. என்னுடைய ஆர்வம் தான் என் பசங்களையும் பாரம்பரிய மருத்துவ துறையில் ஈடுபட வைத்துள்ளது. எனக்கு இரண்டு மகன்கள்.

ஒருவர் ஆயுர்வேத டாக்டர். அவரின் மனைவி சித்தா டாக்டர். இன்னொரு மகன் ஹாஸ்பிடல் நிர்வாகத்தில் எம்.பி.ஏ படிச்சிருக்கார். அவர் மருத்துவாமனையினை நிர்வகித்து வருகிறார். அவரின் மனைவி நேச்சுரோபதி டாக்டர். என் நண்பரின் மகள் ஹோமியோபதி டாக்டர். இவ்வாறு அனைவரும் ஒன்றாக இணைந்து இயற்கை சார்ந்த மருத்துவ துறையில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றவர் இயற்கையோடு இணைந்து வாழ்வதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை என்கிறார்.

‘‘இன்றைய அவசர உலகத்தில், நமக்கான நேரத்தினை நாம் செலவு செய்ய மறந்துவிடுகிறோம். ஒன்று வேலையில் மும்முரமாக ஈடுபடுகிறோம் அல்லது கிடைக்கும் நேரத்தில் நம் கையில் உள்ள செல்போனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே சமயம் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. காரணம், இப்போது சிட்டியில் பலதரப்பட்ட உணவகங்களால், வித்தியாச உணவுகளை சாப்பிட விரும்புகிறோமே தவிர அவை நம்முடைய உடலுக்கு ஆரோக்கியமானதா என்று நாம் கவனிப்பதில்லை. சொல்லப்போனால் இயற்கையுடன் ஒன்றி வாழக்
கூடிய வாழ்வினை நாம் தவறவிட்டுவிட்டோம்.

நான் குருகுலத்தில் படிக்கும் காலத்தில் அந்தந்த நேரத்தில் உரிய வேலையினை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அதில் மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்கும் பழக்கம் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது. அதற்கு பிறகு மூலிகைகள் பற்றி சொல்லித் தருவார்கள். மூலிகைகள் பொறுத்தவரை சில செடிகள் பார்ப்பதற்கு ஒன்று போல் இருக்கும். ஆனால் அதன் தன்மைகள் மாறுபடும். சரியான மூலிகைச் செடிகளை கண்டறிவது முதல் அதனைக் கொண்டு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது வரை அனைத்தும் கற்றுக் கொண்டேன்.

பொதுவாக மூலிகைச் செடிகளை பறிக்கும் முன் அதனை வணங்கி அதற்குரிய மந்திரங்களை ெசால்ல வேண்டும். காரணம், இயற்கை அன்னை நமக்கு கொடுத்திருக்கும் வரப்பிரசாதங்கள் தான் இந்த மூலிகைகள். அவற்றுக்கு நாம் உரிய மரியாதையினை செலுத்த வேண்டும். எல்லாவற்றையும் விட ஒரு பிரச்னைக்கான மருந்தினை பரிந்துரை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சுக்கு, என்பது எல்லோருக்கும் தெரியும். சுக்கினை இடித்து பவுடராக்கி ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இது எந்தவித பிரச்னையும் இல்லாதவர்கள் சாப்பிடலாம். ஆனால் அல்சர் பிரச்னை உள்ளவர்களுக்கு வயிற்று எரிச்சல் ஏற்படும். இப்படி ஒரு மருந்து நன்மை, தீமை என இரு குணங்களை கொண்டிருக்கும். ஒரு மூலிகையை எடுத்துக் கொண்டால் அதன் சுவையில் இருந்து, வாசனை என பல விஷயங்களை கற்றுக் கொள்வோம். அதுதான் குருகுல யாசகம்.

எந்த மருந்தாக இருந்தாலும் அளவோட தான் சாப்பிடணும். ஒருவருக்கு சளி மற்றும் அல்சர் என இரண்டு பிரச்னை இருக்கும். சளிக்கு சூடான மருந்தும் அல்சருக்கு குளிர்ச்சியினை ஏற்படுத்தும் மருந்தும் தரணும். எந்த இரண்டு மூலிகையை இணைத்தால் இரண்டுக்குமான தீர்வு கிடைக்கும் என்பதை பார்க்க வேண்டும். சுக்கு சளியை முறிக்கும். சீரகம் குளுமைப்படுத்தும். இவை இரண்டுக்குமான பார்முலாவினை தயாரிக்கணும். அதையும் அவர்களின் நாடியின் துடிப்பை அறிந்து தான் கொடுக்கணும். பொதுவாக எங்களைப் போன்ற பாரம்பரிய முறையில் மருத்துவம் பார்ப்பவர்கள் நாடியினை கணித்துதான் சிகிச்சை அளிப்பார்கள். ஒருவரின் நாடித் துடிப்பைக் கொண்டு உடலில் உள்ள பிரச்னையை அறிய முடியும்’’ என்றவர் மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘இந்த காலத்தில் மருத்துவக் கல்லூரியில் படிச்சாலும், செயல்முறையில் அனுபவம் கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கு நாடிப் பிடித்து பலன் அறிவது, வர்மக் கலை, பஞ்சகர்மா, தியானம், யோகா. அக்குபங்சர் குறித்து பயிற்சி எடுக்கிறேன். ஒருவரின் உடலில் வாத நாடி, பித்த நாடி மற்றும் கப நாடி என்று மூன்றுவிதமாக நாடிகள் துடிக்கும். அந்த கணக்குதான் நோயினை கண்டறிய உதவும். அந்தக்காலத்தில் ரத்தக்கொதிப்பினை நாடிக் கொண்டுதான் கணக்கிடுவோம். இப்போது அதற்கான இயந்திரங்கள் வந்து இருந்தாலும், இதற்கான காரணம் என்ன என்பதை அவர்களின் வாழ்க்கை முறை மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம். முதலில் பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்கு சிகிச்சை.

அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவில் சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். சித்தா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி என அனைத்து சிகிச்சைக்கான ஃபார்முலா ஒன்றுதான் என்றாலும், கொடுக்கப்படும் மருந்துகளின் முறைகள்தான் மாறும். சித்தா, ஆயுர்வேதம் லேகியம், கஷாயம் என்றிருக்கும். ஹோமியோபதி மாத்திரை வடிவங்கள். நேச்சுரோபதியில் அக்குபிரஷர், மசாஜ், உடற்பயிற்சி, மூலிகை மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

இந்த சிகிச்சை மையம் துவங்கி 25 வருஷமாகுது. இங்கு தங்கியும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 21 நாட்கள் தங்கி சிகிச்சை எடுப்பதால், உடலில் உள்ள கழிவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறும். காலை முதல் இரவு வரை என அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கும். அதாவது உடற்பயிற்சி, உணவு, மனதை ரிலாக்ஸ் செய்யும் தியானம்… என 21 நாட்கள் சிகிச்சை முறைகள் இருக்கும். அது முழுமையடைந்த பிறகு அவர்கள் புதிதாக பிறந்தது போல் உணர்வார்கள். ஆரோக்கியத்திற்கு மனசுதான் காரணம். இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தால் எந்தவித நோயும் நம்மை அண்டாது, இளமையாகவும் இருக்கலாம்’’ என்றார் சரவணாம்பிகை.

தொகுப்பு: ரிதி

The post இயற்கையோடு வாழ்ந்தால் ஆரோக்கியம் கியாரண்டி! appeared first on Dinakaran.

Tags : Saffron ,
× RELATED மைதா குலாப் ஜாமுன்